சுஜித் மீட்பு பணியில் ஸ்டாலின் மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்: முதல்வர் பழனிச்சாமி சாடல்

திருச்சி.அக்டோபர்.29

சுஜித்  மீட்புபணி குறித்து ஸ்டாலின்  மனசாட்சி இல்லாமல் பேசுகிறார் என  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சாடியுள்ளார்.

 மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில்  சுஜித் என்ற குழந்தை  தவறி விழுந்தான். மீட்பு குழுவினரின் 80 மணி போராட்டத்திற்கு பிறகு இறந்த நிலையில் மீட்கபட்ட சுஜித் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடுகாட்டிபட்டிக்கு நேரில் சென்று சுஜித்தின் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

சிறுவனின் பெற்றோர் ஆரோக்கியதாஸ், கலாமேரி ஆகியோருக்கு முதலமைச்சரும்,துணைமுதலமைச்சரும் ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. தீயணைப்புத்துறை,காவல்துறை, தேசியபேரிடர் மீட்புக்குழு,மாநில பேரிடர்  மீட்புக்குழு,என்.எல்.சி,ஓ.என்.ஜி.சி  நிறுவனங்களைச்  சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள்  மீட்பு பணியில் ஈடுபட்டனர். எப்படியாவது சிறுவனை உயிருடன் மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில்  அமைச்சர்களும்,அதிகாரிகளும் நேரில் இருந்து செயலாற்றியதை  ஊடகங்கள் மக்களுக்கு காண்பித்தது. ஆனால் சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்  இதில் குறை கூறுவது, அரசியல் நோக்கமுடையது, மனசாட்சி இல்லாமல்  அவர் பேசுகிறார். திட்டமிட்டு வதந்தியை பரப்புகிறார்.ராணுவத்தை வரவழைத்து இருக்கு வேண்டும் என்று கூறும் ஸ்டாலின், திமுக ஆட்சியில் தேனி மாவட்டம் தோப்புபட்டியில்  ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை  உயிரிழந்த நிலையில்  மீட்டபோது என்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார். ராணுவத்தை அழைத்தாரா?   அவர் என்ன விஞ்சானியா என்றார்.

பின்னர் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாயும், அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாயும் சுஜித் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *