ஓசூர் முத்தூட் பைனான்சில் கொள்ளையடித்த 6 பேர் கைது.. ரூ.7 கோடி நகைகள் பறிமுதல்
ஓசூர், ஜன-23

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்-பாகலூர் சாலையில் முத்தூட் பைனான்ஸ் வாடகை கட்டிடத்தில் முதல் மாடியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிதிநிறுவனம் மூலம் தங்க நகைகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, நேற்று காலை சுமார் 10 மணியளவில் நிறுவன மேலாளர் சீனிவாச ராகவா, ஊழியர்கள் மாருதி, பிரசாந்த், செக்யூரிட்டி ராஜேந்திரன் ஆகியோர் நிதி நிறுவனத்தை திறந்து உள்ளே சென்றனர். சிறிதுநேரத்தில், நகைகளை அடமானம் வைக்க 3 வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர். அவர்களை பின்தொடர்ந்து மேலும் 3 பேர் வந்தனர்.
தொடர்ந்து, நிறுவனத்தின் கேட்டை உள்பக்கமாக சாத்திய கொள்ளையர்கள் அனைவரையும் மிரட்டி அமர வைத்து, ஊழியர்களை தாக்கி லாக்கரின் சாவியை பெற்றுக்கொண்டு லாக்கர்களில் இருந்த சுமார் 7.5 கோடி மதிப்பிலான 3,000 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.96 ஆயிரம் ஆகியவற்றை, அவர்கள் கொண்டு வந்திருந்த பையில் போட்டு கொண்டனர். அப்போது, நிறுவனத்திற்கு வந்த வாடிக்கையாளர்கள், கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் இருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இருப்பினும், மர்ம நபர்கள் வெளியே வந்து டூவீலர்களில் ஏறி தப்பிச்சென்றனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. கொள்ளை குறித்து தனிப்படை அமைத்து போலீசார் மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை ஹைதராபாத் அருகே சம்சாத் பூர் என்ற இடத்தில் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர் காவல்துறையினர். அவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகள் (பிஸ்டல்), 2 கத்தி மற்றும் கொள்ளையடித்துச் சென்ற சுமார் 7.5 கோடி மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் 6 பேரும் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.