4 மீனவர்கள் கொலை.. இலங்கைக்கு மத்திய அரசு கடும் கண்டனம்

கப்பலை மோதவிட்டு 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை தூதரிடம் மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

டெல்லி, ஜன-22

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 18-ம் தேதி தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கிய ஜேசுவின் விசைப்படகில் மெசியா, நாகராஜ், செந்தில்குமார், சாம்சன்டார்வின் ஆகிய 4 மீனவர்களும் மீன் பிடிக்க சென்றுள்ளனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர். தமிழக மீனவர்களை கைது செய்வதற்காக தங்களது கடற்படை ரோந்துப் படகில் துரத்தியபோது மீனவர்களின் படகில் கடுமையாக மோதியதில் படகு மூழ்கி நான்கு மீனவர்களும் நடுக்கடலில் மாயமாகினர். அதனை அடுத்து 4 பேரின் உடல்களையும் இலங்கை கடற்படை மீட்டது.

இது சம்பந்தமாக மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

இந்தநிலையில் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அதிகாரிகள், அங்குள்ள இலங்கை தூதரை அலுவலகத்திற்கு வரும்படி அழைத்தனர். அவரிடம் இந்த சம்பவத்தை இந்தியா கடுமையாக கண்டிப்பதாக கூறினார்கள். மேலும் மத்திய அரசு சார்பில் கண்டன கடிதமும் அவரிடம் வழங்கப்பட்டது. அதில், இலங்கை அரசு இது போன்ற அத்துமீறல் சம்பவத்தில் ஈடுபட்டது தவறானது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *