ஒசூர் முத்தூட் பைனான்சில் துப்பாக்கி முனையில் 25 கிலோ தங்கம் கொள்ளை..10 தனிப்படைகள் அமைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பாகலூர் சாலையில் இயங்கி வரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஒசூர், ஜன-22

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பாகலூர் சாலையில் இயங்கி வரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் இன்று காலை 9.30 மணிக்கு துப்பாக்கி முனையில் 5 கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலாளர் சீனிவாச ராகவ் மாருதி பிரசாத் உள்ளிட்ட அங்கு வேலை செய்தவர்களை தாக்கி கட்டி வைத்துவிட்டு, 25 கிலோ தங்கம், ரூ.96 ஆயிரம் பணம் ஆகியவற்றை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதன் மதிப்பு ஏழரை கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவத்தின் போது, முத்தூட் பைனாஸ் நிறுவனத்தில் பணம் எடுக்க வந்தவர்களும் துப்பாக்கிமுனையில் கை, கால்களை கட்டி வைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒசூர் நகர காவல்துறையினர் முத்தூட் பைனான்ஸ் அலுவலத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் மேலாளரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நிதி நிறுவனம் ஒன்றில், துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக நேரில் ஆய்வு செய்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஒசூரில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தை நோக்கி 2 தனிப்படைகள் சென்றுள்ளன. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *