கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்..! வதந்திகளை நம்ப வேண்டாம் என பேட்டி..!!
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
சென்னை, ஜன-22

கொரோனா தடுப்பூசி கடந்த 16-ந் தேதி முதல் நாடுமுழுவதும் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன். தமிழகத்தில் 907 பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதால் 908 ஆவது நபராக, ஒரு மருத்துவராக மற்றும் ஐஎம்ஏ உறுப்பினராக தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளேன். தடுப்பூசியை எடுத்துக் கொள்வதில் எந்த தயக்கமும் வேண்டாம். தடுப்பூசி எடுத்துக்கொண்டு கரோனா தொற்று பாதிப்பில் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்ட அமைச்சர், தடுப்பூசி தொடர்பாக எந்தவொரு வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.