கொரோனா உறுதியான சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்.. விக்டோரியா மருத்துவமனை அறிக்கை.!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பெங்களூரு, ஜன-22

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா தண்டனை முடிந்து விடுதலையாவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் பெங்களூரு பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, சசிகலாவுக்கு மேற்கொண்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவருக்கு கொரோனா சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.

இதனிடையே, பௌரிங் அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் கருவி செயல்படாததால், அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் கே.ஆா்.சந்தை பகுதியில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு சசிகலா மாற்றப்பட்டாா்.

இந்நிலையில், சசிகலா உடல்நலம் குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருக்கிறது. சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு பாதிப்பும் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 98 ஆக இருந்த நிலையில் இன்று ஆக்சிஜன் அளவு 95 ஆக இருக்கிறது. நுரையீரலில் சளி அதிகமாக இருக்கும் நிலையில் ஆக்சிஜன் அளவு 95 என்ற அளவில் உள்ளது. சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *