சசிகலாவின் உடலில் ஆக்சிஜன் அளவு 79% இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு, ஜன-20

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய நான்கு ஆண்டு சிறை தண்டனை வருகிற 27-ம் தேதி நிறைவுபெறுகிறது.
பெங்களூரு சிறையில் இருந்து 27-ம் தேதியன்று சசிகலா விடுதலையாக இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக லேசான காய்ச்சல், இருமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இன்று காலை திடீரென சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவக்குழு அவரது அறைக்கு விரைந்தது. அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலாவின் ஆக்சிஜன் அளவு 79% இருப்பதாகவும், காய்ச்சல் இருப்பதாகவும் பவ்ரிங் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. காய்ச்சல் மற்றும் இருமலுடன் சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளது.