புதுச்சேரியில் காங்கிரஸ் தனித்து போட்டியிட தயார்.. கே.எஸ்.அழகிரி அதிரடி

புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார் என்று தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜன-20

புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி ஆட்சியில் நாராயணசாமி முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். ஆனால் சமீபமாக இரு கட்சிகளிடையே சுமுக உறவு காணப்படவில்லை. குறிப்பாக துணை நிலை ஆளுநர் கிரன்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நடத்திய போராட்டத்திற்கு கூட்டணிக் கட்சியான திமுக உரிய ஆதரவு அளிக்கவில்லை. எனவே இந்தக் கூட்டணி தொடர்ந்து நீடிக்குமா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

புதுவையில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று மாநில தி.மு.க.வினர் கூறி வந்தனர். மேலும் ஜெகத்ரட்சகன் எம்.பி. முதலமைச்சராக வருவார் என்று அறிவித்தனர். இதனால் இரு கட்சிகளும் வரும் சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டியிடுமா என்ற குழப்பம் ஏற்பட்டது.

இதுபற்றி திருப்பூர் வந்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

புதுவையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி இடையே எந்த குழப்பமும் இல்லை. அங்கு ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தாலும் அது பேசி தீர்த்துக் கொள்ளப்படும். புதுவையை பொறுத்தவரை அந்த மாநில தலைவர்கள்தான் இதுபற்றி கருத்துகளை தெரிவிக்க வேண்டும். ஒருவேளை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட அதை தீர்த்துக்கொள்ளும் நிலையில் நாங்கள் இருக்கிறோம்.
காங்கிரசை பொறுத்த வரையில் எல்லாவற்றுக்கும் எப்போதுமே தயாராக இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை நண்பர்களுடன் எப்போதுமே நண்பர்களாகவே இருக்கவே விரும்புகிறோம். நண்பர்களுடன் நாங்கள் ஒருபோதும் பகையை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை. ஒருவேளை அதற்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் நாங்கள் தனித்து போட்டியிடவும் தயாராகவே இருக்கிறோம். அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இப்போதுவரை எங்கள் கூட்டணியில் எல்லாமே நன்றாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *