தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.. மொத்தம் 6,26,74,446 வாக்காளர்கள்..!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை, ஜன-20

தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான சுருக்க திருத்த பணிகள் நிறைவடைந்தன. இதுவரை பெயர் சேர்ப்பதற்கோ, திருத்துவதற்கோ, இடம் மாறியதற்காகவோ விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதன்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நவம்பர் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. அன்று முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, நேரடியாகவும், ‘ஆன்லைன்’ வழியாகவும், விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி டிசம்பர் 15-ம் தேதி முதல் நடந்து வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேர். பெண் வாக்காளர்கள் 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரம் பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழகத்தில் பெண் வாக்காளர் எண்ணிக்கை ஆண்களை விட 9,90,254 அதிகமாக உள்ளது. மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர் உள்ளனர். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 40 லட்சத்து 57 ஆயிரத்து 3690 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்திலேயே அதிக வாக்காளர்கள் இருக்ககூடிய தொகுதியாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. இதில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்திலேயே குறைந்தபட்சமாக சென்னை துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 272 வாக்காளர்கள் உள்ளனர். கவுண்டம்பாளையம், மாதவரம், மதுரவாயல், ஆவடி, பல்லாவரம் உள்ளிட்ட தொகுதிகளில் தலா 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். துறைமுகம், கீழ்வேளூர், ராயபுரம், கூடலூர், குன்னூர், எழும்பூர், நாகை ஆகிய 8 தொகுதிகளில் 2 லட்சத்திற்கும் குறைவான வாக்காளர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *