திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற அமெரிக்காவின் கஜானாவே போதாது.. S.P.வேலுமணி பேச்சு
திருப்பூர், ஜன-20

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக வின் புதிய அலுவலகம் காங்கேயம் சாலையில் திறக்கப்பட்டது. இதனைத் திறந்து வைத்த கோவை திருப்பூர் நீலகிரி மாவட்ட அதிமுக பொறுப்பாளரும் உள்ளாட்சி துறை அமைச்சருமான எஸ் பி வேலுமணி அலுவலகத்தை திறந்து வைத்த பின்பு தொண்டர்களிடம் பேசுகையில், “திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறி வருகிறது. திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனில் அமெரிக்காவின் கஜானாவே போதாது . 2016 – 17 ஆம் ஆண்டிற்கு பின்பே என் மீதும் அமைச்சர் தங்கமணி மீதும் தொடர்ந்து ஊழல் புகாரை திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறி வருகிறார். அதற்கு காரணம் மூன்றே மாதத்தில் குறுக்கு வழியில் முதல்வராக நினைத்த ஸ்டாலினின் கனவை தகர்த்தோம். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடர்ந்து முதல்வராக நீடிக்க பக்கபலமாக இருந்தோம்.
ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்ததற்கு பக்கபலமாக இருந்தோம். இதேபோல், 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாமக , தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைக்க உழைத்தோம். இதனால் தான் என் மீதும், அமைச்சர் தங்கமணி மீதும் கோபத்தில் பொய்யான ஊழல் புகார்களை முக ஸ்டாலின் கூறி வருகிறார்.
ஸ்டாலின் துணை முதல்வராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்து இதுவரை தமிழகத்திற்கு எந்த ஒரு சாதனையும் செய்யவில்லை. ஆனால் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில் இதுவரை மத்திய அரசிடமிருந்து 143 விருதுகளை பெற்றுள்ளோம். . வருகின்ற தேர்தலில் எடப்பாடியார் முதல்வராக வருவார் . அதற்காக நாம் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக பணியாற்றவேண்டும்.
நமக்கு எதிரி திமுக என்பதை மனதில் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்”
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார்.