‘இயேசு அழைக்கிறார்’ என்ற கிறிஸ்தவ மத கூட்டங்களை நடத்தி வரும் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு..!

கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்பட தமிழகத்தில் 28 இடங்களில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் புதன்கிழமை காலை 8 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, ஜன-20

சென்னை அடையாரை சேர்ந்த பால் தினகரன் என்பவர் இயேசு அழைக்கிறார் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கு சொந்தமான சென்னை, கோவை, பாரிமுனை, அடையாறு, கோவை பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட 28 இடங்களில் இன்று காலை முதல் சுமார் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக அவரது தலைமை அலுவலகத்திலும், அடையாறில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கோவை காருண்யா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பள்ளியிலும் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பால் தினகரன் வரி ஏய்பு செய்ததாகவும், அதேநேரத்தில் இயேசு அழைக்கிறார் என்ற அமைப்புக்கு எங்கிருந்து முதலீடு செய்யப்படுகிறது என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இயேசு அழைக்கிறார் என்ற அமைப்பு வெளிநாடுகளில் பல்வேறு சொத்துக்கள் வைத்திருப்பதாகவும் அது தொடர்பான ஒரு விசாரணையும் நடைபெற்று வருவதாக வருமான வரித்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த சோதனையானது நாளை வரை தொடரும் எனவும் நிறுவனத்தில் கைப்பற்ற பொருட்கள் குறித்து மாலை அறிவிப்பு வெளியாகும் என வருமான வரித்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இயேசு அழைக்கிறார் ஜெப நிறுவனத்தை 1983-ம் ஆண்டு பால் தினகரனின் தந்தை டி.ஜி.எஸ்.தினகரன் தொடங்கினார். 1986-ம் ஆண்டு கோவை காருண்யா பல்கலைக்கழகத்தையும் அவரே தொடங்கினார்.

தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஜெபக் கூட்டங்களை நடத்திய டி.ஜி.எஸ்.தினகரன் இதன் மூலமே கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பிரபலமானார். கடந்த 2008-ம் ஆண்டு டி.ஜி.எஸ்.தினகரன் மரணம் அடைந்த பிறகு தந்தையின் வழியில் பால்தினகரனே நிறுவனங்களையும், கல்வி அமைப்புகளையும் நடத்தி வருகிறார். காருண்யா பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பால் தினகரன் உள்ளார்.

இவரது நிறுவனங்கள் முறையாக வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரிலேயே இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனை முடிவில்தான் வரி ஏய்ப்பு தொடர்பான முழு விவரங்கள் தெரிய வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *