உயிர்பலி கொடுத்தால்தான் நடவடிக்கையா? உயர் நீதிமன்றம்
சென்னை.அக்டோபர்.29
அரசு நடவடிக்கை எடுப்பதற்கு உயிர்பலி கொடுக்க வேண்டுமா என்று, ஆழ்துளை கிணறு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆழ்துளை கிணறு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் உதவியாளர் பொன் ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், அதில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும்போது அவர்களை காப்பாற்ற 6 விதமான தொழில்நுட்பங்கள் இந்தியாவில் உள்ளன.
இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அடுத்த சில மணி நேரத்திலேயே உயிருடன் குழந்தையை மீட்டுவிடலாம். ஆனால் நடுக்காட்டுப்பட்டி சம்பவத்தில் இந்த தொழில் நுட்பத்தில் ஒன்றை கூட பயன்படுத்தவில்லை.
காலதாமதம் ஏற்பட்டதால் ஒரு சிறுவனின் உயிர் பறிபோய் விட்டது. இதுபோன்ற தவறுகள் இனியும் தொடராமல் இருக்க கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக பயன்படுத்த தமிழக அரசுககு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை, நீதிபதி சத்யநாராயணன், நீதிபதி சேஷாயி ஆகியோர் இன்று விசாரித்தனர். அப்போது,விதிகளை மீறி எத்தனை ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன? இதுபோன்ற தவறுகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, பயன்படுத்தாமல் எத்தனை ஆழ்துளை கிணறுகள் உள்ளன,அவற்றின் நிலை என்ன ? எத்தனை ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டது ? மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ? அரசு நடவடிக்கை எடுப்பதற்கு, சுஜித்தை போன்று உயிர்ப்பலி கொடுக்க வேண்டுமா ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக நவம்பர் 21ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.