கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து மகள்கள் அறிக்கை..!
சென்னை, ஜன-19

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டு படிக்கட்டில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அதற்கு அறுவை சிகிச்சை செய்து இருந்தார்.
இந்தநிலையில் அறுவை சிகிச்சைசெய்த காலில் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காலில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும், சில நாட்கள் ஓய்வு எடுக்கப்போவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டார். அவரது வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இது தொடர்பாக ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கமல்ஹாசனுக்கு ஏற்கனவே ஆபரேசன் செய்யப்பட்ட வலது காலில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வலது கால் எலும்பில் ஏற்பட்ட அந்த பாதிப்பை சரி செய்வதற்காக நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளது. அவர் விரைவில் அதில் இருந்து குணமடைந்து வருவார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதி, அக்சரா ஆகியோரும் அறுவை சிகிச்சை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இன்று காலையில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் ஜே.எஸ்.என்.மூர்த்தி ஒருங்கிணைப்பில், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன்குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக, உற்சாகமாக இருக்கிறார்.
அப்பாவை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களை சந்திப்பார், மகிழ்விப்பார். அனைவரது அன்பிற்கும், பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.