சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை.. உறுதியாக கூறிய முதல்வர்

சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

டெல்லி, ஜன-19

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

”தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு முடித்து வைக்கப்பட்ட பணிகளைத் தொடங்கி வைக்கவும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் வரவேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அவரும் வருவதாக ஒப்புக் கொண்டுள்ளார். காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம், கல்லணை புனரமைப்புத் திட்டம், பவானி உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் திட்டம், முடிந்துள்ள வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை திட்டம் ஆகியவற்றைத் தொடங்கி வைக்க வேண்டும் என்றும், இந்தியன் ஆயில் தூத்துக்குடி எரிவாயு திட்டத்தைத் தொடங்கி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். பிரதமர் இசைவு தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களுக்குப் பெரிதும் பயன்படும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம், காவிரி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் நடந்தாய் வாழி காவேரி திட்டம், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது நிலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை வைத்தேன். நிவர், புரெவி புயல் பாதிப்புகள் மற்றும் ஜனவரியில் அதிக மழை காரணமாக விவசாயிகள் பாதிப்புக்கான நிவாரணத்திற்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

தமிழ்நாட்டின் பல்வேறு முக்கியத் திட்டங்களுக்குப் பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் நிதி ஆதாரம் பெறுவதற்கு அனுமதி கேட்டுள்ளேன். திருவள்ளூர் மாவட்டத்தில் மருந்துகள் பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவக் கருவிகள் பூங்கா அமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளேன்.
இலங்கைச் சிறையிலிருந்து 40 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கோரிக்கையை ஏற்று மீதமுள்ளவர்கள் மீட்கப்பட உள்ளனர்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அரசியல் அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினீர்களா?

திரும்பத் திரும்பச் சொல்கிறேன். அரசியல் ரீதியாக எந்த விஷயத்தையும் பேசவில்லை. பேசுவதற்கு எந்த நேரமும் இல்லை. இன்னும் தேர்தலுக்குக் காலம் உள்ளது.

தமிழகத்தில் தாமரை மலரும் என்று பாஜகவினர் சொல்கிறார்களே? உங்கள் கருத்து என்ன?

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. அவர்கள் அது குறித்துத்தான் பேசுவார்கள். அதில் தவறில்லை. அவரவர்கள் அவர்களது கட்சி குறித்துத்தான் பேசுவார்கள். சாதாரணக் கட்சியாக இருந்தாலும் அப்படித்தான் பேசுவார்கள். அகில இந்தியக் கட்சிகள் அப்படித்தான் பேசும்.

திராவிடக் கட்சிகளை ஒழிக்கவேண்டும் என்று பேசுகிறார்களே?

கூட்டணி வேறு கொள்கை வேறு. ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பது நினைப்பதில் தவறில்லை. அது அவர்கள் கட்சிக் கொள்கை.

கூட்டணியில் யார் தலைமை என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதா?

அதிமுக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுவிட்டது.

சசிகலா விடுதலைக்குப் பின் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதா?

ஒன்றும் வாய்ப்பு இல்லை. அவர் அதிமுகவிலேயே இல்லை.

பாஜக அவரை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று பேசப்பட்டதா?

யார் சொன்னது? அப்படி வாய்ப்பே இல்லை. அப்படி எல்லாம் பேச்சுவார்த்தையே கிடையாது. நாங்கள் தமிழக வளர்ச்சித் திட்டத்துக்காகவும், நிதி ஒதுக்கீட்டுக்காகவும் சந்தித்தோம். 100% இதைத்தான் பேசினோம்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *