கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்.. அமைச்சர் S.P.வேலுமணி அதிரடி

கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை, ஜன-19

கோவை வ.உ.சி பூங்கா பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானம் ஓடு தளத்துடன் பயிற்சியாளர்கள் ஓய்விடம், பார்வையாளர் அரங்கு, கழிவறைகள், குடிநீர் வசதி, மின் விளக்குகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் மாநகராட்சி சார்பில் சுமார் 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தை அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று திறந்து வைத்தார்.தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சறுக்கு விளையாட்டை பாதுகாப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக இந்த விளையாட்டு மைதானம் மேம்படுத்தப்பட்டுள்ளது. கோவையிலிருந்து குழந்தைகள் சறுக்கு விளையாட்டில் மாநில அளவில் பல்வேறு வெற்றிகளைப் பெற்று வருகின்றார்கள். மேலும் இங்கு பயிற்சி பெறும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பார்கள் என நம்பிக்கை உள்ளது.கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க புறவழிச்சாலை மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் உட்பட 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

இதனிடையே, கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், தெற்கு மண்டலத்துக்குட்பட்ட கோவைப்புதூர் ஹவுசிங் யூனிட் டபிள்யூ பிளாக், சாந்தி ஆசிரமம் சாலை ஆர் பிளாக், லட்சுமி நகர், மீனாட்சி நகர், அம்மா நகர், மருதம் நகர், சமீம் கார்டன், அண்ணா நகர் சாலை, ஓம்சக்தி நகர், காமாட்சி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மொத்தம் ரூ.2 கோடியே 54 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *