ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து 2-வது முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா அபாரம்..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. பார்டர் கவாஸ்கர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. பரப்பரப்பான ஆட்டத்தில் 327 ரன்கள் இலக்கை எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் வீரர் ரிஷாப் பந்த் 80 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

சிட்னி, ஜன-19

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 75.5 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்தது. இதனால் 4-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 4-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில், ரோஹித் சர்மா 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்று, ரோஹித் சர்மா 7 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு புஜாராவும் ஷுப்மன் கில்லும் அருமையான கூட்டணியை அமைத்தார்கள். 90 பந்துகளில் அரை சதமெடுத்த ஷுப்மன் கில், சதம் அடிப்பார் என்கிற நம்பிக்கையை உருவாக்கினார். எனினும் 146 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானேவும் விரைவாக ரன்கள் எடுக்க முயன்றார். ஆனால், 22 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

5-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி, 63 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. 168 பந்துகளில் 43 ரன்களுடன் புஜாராவும் 23 பந்துகளில் 10 ரன்களுடன் ரிஷப் பந்தும் களத்தில் இருந்தார்கள். தேநீர் இடைவேளைக்குப் பிறகு ரிஷப் பந்தின் ஆட்டத்தால் பிரிஸ்பேன் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை நெருங்கியது.

ஆஸி. அணிக்குப் பெரிய சவாலாக விளங்கிய புஜாரா 211 பந்துகளை எதிர்கொண்டு 56 ரன்களை எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரிஷப் பந்த் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அரை சதத்தை எட்டினார்.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 85 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. இந்திய அணி வெற்றி பெற கடைசி 15 ஓவர்களில் 69 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் டெஸ்ட் முடிவை கிரிக்கெட் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.
ரன்கள் எடுக்க முயன்றபோது மயங்க் அகர்வால் 9 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அடுத்து வந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், மிகவும் நம்பிக்கையுடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கம்மின்ஸ் ஓவரில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்து அசத்தினார். எனினும் கடைசிக்கட்டத்தில் வாஷிங்டன் 22 ரன்களில் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஷர்துல் தாகூர் களம் இறங்கினார். இந்த ஓவரில் ஐந்து ரன்கள் கிடைத்தது. கடைசி 4-வது ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது ஓவரை ஹசில்வுட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பண்ட் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தில் ஷர்துல் தாகூர் ஆட்டமிழந்தார். கடைசி பந்தை ரிஷப் பண்ட் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 97 ஓவர்களில் 329 ரன்கள் எடுத்து பிரிஸ்பேன் டெஸ்டை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரிஷப் பந்த் நம்பமுடியாத விதத்தில் இலக்கை விரட்டி 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *