ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எந்த கட்சியிலும் இணையலாம் என அறிவிப்பு..!

ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜன-18

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதில்லை என கடந்த டிசம்பர் 29-ம் தேதி அறிவித்தார். மருத்துவர்களின் அறிவுரைகளை ஏற்று நான் கட்சி தொடங்கவில்லை என அறிவித்திருந்தார். இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. எனவே ரஜினி கட்சி தொடங்க வேண்டும் என்று பலர் அவரது இல்லம் முன்பு போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து, ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 4 மாவட்ட செயலாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனீ, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், ரஜினி ரசிகர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம் என ரஜினி ரசிகர் மன்றம் இன்று அறிவித்துள்ளது.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.
அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *