கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களுக்கு அதிமுக-பாஜக சீட் கொடுக்க கூடாது… அர்ஜூன் சம்பத் சர்ச்சை பேச்சு
நெல்லை, ஜன-18

பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இந்து மக்கள் கட்சி, வரும் சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்- கிறிஸ்தவ சிறுபான்மை இன மக்களை தாக்கியும், விமர்சித்தும், இழிவுபடுத்தியும் பேசி வருகிறது. குறிப்பாக அக் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், கிறிஸ்தவ இஸ்லாமிய சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்து வருகிறார். சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தமிழக அரசு பொங்கல் பரிசை இந்துக்களுக்கு மட்டும் வழங்க வேண்டும், அதை இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு வழங்கக்கூடாது என வலியுறுத்தினார். அவரின் இப்பேச்சு கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இச் சர்ச்சை மறைவதற்குள் மீண்டும் சிறுபான்மையின மக்களை குறிவைத்து அவர் பேசியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக பாஜக கூட்டணியில் கிறிஸ்துவ இஸ்லாமிய வேட்பாளர்களை களம் இறக்குவதை தவிர்க்க வேண்டுமெனவும் அப்படி அவர்கள் களமிறக்கப்பட்டால் அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு வழங்காது, ஆதரவை வாபஸ் பெறும் எனவும், அதை கடுமையாக எதிர்க்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். அதிமுகவாக இருந்தாலும் சரி, பிஜேபியாக இருந்தாலும் சரி, அதை நாங்கள் எதிர்ப்போம். இரண்டு கட்சிகளுக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, இஸ்லாமிய கிறிஸ்தவர்கள் எந்த சூழலிலும் உங்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள். எனவே அவர்களுக்கு சீட்டு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் நாடாளுமன்றத்திற்கோ சட்டமன்றத்திற்கு செல்வதை நாங்கள் விரும்பவில்லை என அவர் பகிரங்கமாக பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.