புதுச்சேரியில் காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுக்கும் திமுக.. முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகனை நிறுத்த முடிவு..!

திமுக புதுச்சேரியிலும் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுப்பது காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஜன-18

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் நடத்தும் எந்தக் கூட்டங்கள், போராட்டங்கள் எதிலும் திமுக பங்கேற்காமல் இருந்துவருகிறது. மேலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில்தான் கூட்டணி என்றும்; புதுச்சேரியிலும் திமுக ஆட்சி என்றும் புதுச்சேரியில் உள்ள திமுக தலைவர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். எனவே, புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலகும் என்று பேசப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் புதுச்சேரியில் இருந்து மட்டும் 9 எம்பிக்கள் கிடைத்தனர். கேரளாவிற்கு பிறகு காங்கிரசுக்கு தற்போது அதிகம் எம்பிக்கள் இருக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்த அளவிற்கு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எம்பிக்கள் கிடைக்கவும், கட்சி உயிர்ப்புடன் இருக்கவும் காரணம் திமுக தான். திமுக கூட்டணியில் காங்கிரசை சேர்த்திருக்காவிட்டால் அந்த கட்சியால் ஒரு இடத்தில் கூட வென்று இருக்க முடியாது.

இதனால் தான் திமுக கூட்டணியில் நீடிக்க காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் திமுகவை பொறுத்தவரை காங்கிரசை தற்போது ஒரு சுமையாக கருத ஆரம்பித்துள்ளது. நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட கட்டாயப்படுத்தி தொகுதியை பெற்ற அந்த கட்சி அங்கு தோல்வியை தழுவியது. இதே போல் கடந்த 2016 தேர்தலிலும் சுமார் 41 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 8 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 39ஐ திமுக கூட்டணி கைப்பற்றியது. ஆனால் தேனியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தோல்வியை தழுவினார்.

இதனால்தான் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு கணிசமான தொகுதிகளை திமுக குறைத்துவிட்டது. தமிழகத்தில் இப்படி என்றால் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை ஓரம்கட்ட திமுக வியூகம் வகுத்து வருவதாக சொல்கிறார்கள். அங்கு திமுக ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. நாராயணசாமி முதலமைச்சராக உள்ளார். கடந்த 5 வருடங்களாக எவ்வித நிபந்தனையும் இன்றி நாரயாணசாமி அரசுக்கு திமுக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் அங்கு மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் கடந்த முறை 9 தொகுதிகளில் திமுக போட்டியிட்டது.

ஆனால் இந்த முறை 30 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த திமுக ஆயத்தமாகி வருவதாக கூறுகிறார்கள். அதோடு மட்டும் அல்லாமல் முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் தொகுதி திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகனை புதுச்சேரி முதலமைச்சர் வேட்பாளராக திமுக அறிவிக்க உள்ளதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன. ஜெகத்ரட்சகன் புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டவர், அதோடு மட்டும் அல்லாமல் திமுகவின் செலவுகளை கவனிக்கும் கஜானாக்களில் ஒருவராகவும் அவர் திகழ்கிறார்.

எனவே புதுச்சேரியிலும் இந்த முறை தனித்து களம் இறங்கி ஆழம் பார்க்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்கள். புதுச்சேரியை பொறுத்தவரை அங்கு காங்கிரஸ் கட்சி பலம் வாய்ந்ததாக உள்ளது. அந்த கட்சியில் இருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸ் என நடத்தி வரும் ரங்கசாமி அடுத்து ஆட்சிக்கு வரும் முனைப்பில் உள்ளார். இந்த நிலையில் தான் 3வது அணியாக திமுக களம் இறங்க ஆயத்தமாகியுள்ளது. இதற்காக ஜெகத்ரட்சகனை திமுக தலைமை களம் இறக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *