முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்.. ஜெ.நினைவிடத்தை பிரதமர் மோடி திறக்க அழைப்பு?
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நாளை (ஜன. 18) டெல்லி செல்கிறாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை (ஜன. 19) பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட தலைவா்களைச் சந்தித்துப் பேசவுள்ளாா்.
சென்னை, ஜன-17

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடியை சந்திப்பதற்காக நாளை டெல்லி புறப்பட்டு செல்கிறார். நாளை மறுநாள் (19-ந் தேதி) பிரதமரை அவர் சந்தித்து பேசுகிறார். தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பிரதமரை அவர் கேட்டுக்கொள்ள இருக்கிறார்.
மேலும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும்படியும் அழைப்பு விடுக்க உள்ளார். வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் மெட்ரோ ரெயில் திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம், கல்லணை சீரமைப்பு திட்டம், பவானி கால்வாய் சீரமைப்பு திட்டம், நெய்வேலி என்.எல்.சி. 1,000 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம், ராமநாதபுரம்- தூத்துக்குடி கியாஸ் குழாய் திட்டம் ஆகிய 5 திட்டங்களை தொடங்கி வைக்கும் படி அவர் பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.
தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. உள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதே கூட்டணி சட்டசபை தேர்தலில் தொடரும் என்று அறிவித்து இருக்கிறார்கள். பிரதமருடனான சந்திப்பின் போது கூட்டணி தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கட்சி பொதுக்குழுகூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டதற்கு பிறகு முதன்முதலாக இப்போதுதான் பிரதமரை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். இதனால், பிரதமருடனான இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று கருதப்படுகிறது.
பிரதமரை சந்தித்த பிறகு உள்துறை மந்திரி அமித்ஷாவையும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார். அதன்பிறகு நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும் அவர் சந்திக்க இருக்கிறார்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு நினைவிடம் விரைவில் திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிலையில், நினைவிடத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காகவும் பிரதமரை நேரில் சந்தித்து முதல்வா் பழனிசாமி அழைப்பு விடுப்பாா் என்றும் கூறப்படுகிறது.