ஜல்லிக்கட்டு தடையை தகர்த்தெறிந்தது அதிமுக அரசுதான்.. முதல்வர், துணை முதல்வர் பெருமிதம்

ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்தது அதிமுக அரசு தான் என்று முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.

மதுரை, ஜன-16

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள், மாடுபிடிவீரர்கள் பங்கேற்பது வழக்கம் அதேபோல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடு, வெளி மாநில சுற்றுலா பயணிகள் பங்கேற்பர்.

இந்த ஆண்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்படுகிறது. மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. மாடுபிடி வீரர்கள் 655 பேருக்கும், 700 காளைகளுக்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை 8.25 மணிக்கு கோவில் காளைகளுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செய்தனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. அதைத்தொடர்ந்து போட்டிக்குரிய காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மாடுபிடிவீரர்கள் ஒரு சுற்றுக்கு 75 பேர் வீதம் தனித்தனி குழுவாக களமிறக்கப்படுகின்றனர். அதிக காளைகளை அடக்கும் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவர். அதிக காளைகளை அடக்கும் வீரர்கள், சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் இருவரும். தலா ஒரு கார் பரிசாக வழங்குகின்றனர்.

அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து முதல்வர் பேசியது:

உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. நமது கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் காக்கும் வகையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வழிவகுத்து கொடுத்தது அதிமுக அரசு தான். சீறி வரும் காளைகள அடக்கும் வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களான விவசாயிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற நமது பாரம்பரியத்தை காக்க அதிமுக அரசு தூணாக இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கான தடைகளையெல்லாம் தகரத்து எறிந்து தற்போது தொடர்ந்து சிறப்பாக நடைபெற அதிமுக அரசு வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது.

முதல்வரும், துணை முதல்வரும் 1 மணி நேரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை ரசித்து பார்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *