உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை இந்தியாவில் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!!
உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
டெல்லி, ஜன-16

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் 5க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதியளித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த 2 தடுப்பூசிகளும் புனேவில் உள்ள ஆய்வகங்களில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் துவக்கி வைத்தார். முதல் கட்டமாக நாடு முழுவதும் 3,006 மையங்களில் சுமார் 3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி படிப்படியாக போடப்பட்டுள்ளது.
தொடக்க நாளில், ஒவ்வொரு இடத்திலும் சுமார் 100 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்படும். முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை (ஐசிடிஎஸ்) ஊழியர்கள் உட்பட அரசு மற்றும் தனியார் துறை சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
முக்கிய நிபந்தனைகள்
- 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட அனுமதிக்கப்படும்.
- கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி கொடுக்கக்கூடாது.
- 14 நாட்கள் இடைவெளி அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களை பிரிக்க வேண்டும்.
- முதல் டோஸில் எந்த தடுப்பூசி வழங்கப்பட்டதோ, அதே மருந்தைதான் இரண்டாவது டோஸாகவும் வழங்க வேண்டும். தடுப்பூசியை மாற்றி போடக்கூடாது.
- ரத்தப்போக்கு அல்லது ரத்தம் உறைதல் கோளாறு உள்ளவர்களுக்கு தடுப்பூசியை எச்சரிக்கையுடன் வழங்க வேண்டும்.
- நோய்த்தொற்றின் (செரோ-பாசிட்டிவ்) அல்லது ஆர்டி-பி.சி.ஆர் பாசிடிவ் கொண்டவர்கள், நாட்பட்ட நோய்கள் (இருதய, நரம்பியல், நுரையீரல், வளர்சிதை மாற்றம், சிறுநீரக பாதிப்பு), நோயெதிர்ப்பு பாதுகாப்பு, எச்.ஐ.வி பாதிப்பு கொண்டவர்களை அதிக கவனத்தில் கொண்டு தடுப்பூசி கொடுக்கலாம்.
- கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு என்று பிரத்யேகமான தனித்தனி வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.