3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என மத்திய அரசு பிடிவாதம்.. 9-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 9-வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதனையடுத்து வரும் ஜனவரி 19-ஆம் தேதி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஜன-15

மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேவேளையில் திருத்தங்கள் கொண்டு வரத் தயார், ஆனால் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.

இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே 8 கட்ட பேச்சுவார்த்தையில் முக்கியமான பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்று 9-ம் கட்ட பேச்சுவார்த்தை மத்திய அரசுக்கும் – விவசாயிகள் சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்றது.

பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், மத்திய அமைச்சர்களும் கலந்துகொண்டனர். மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

டெல்லி விஞ்ஞான் பவனில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 51 நாட்களாக போராடி வருகின்றனர். இதனிடையே,10-ம் கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *