நிச்சயம் தமிழகத்தில் தாமரை மலரும்.. அடித்துச்சொல்லும் ஜே.பி.நட்டா..!

தமிழகத்தில் நிச்சயம் தாமரை மலரும் என துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கூறினார்.

சென்னை, ஜன-15

துக்ளக் பத்திரிகையின் 51-ஆவது ஆண்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா விழாவில் பங்கேற்று பேசியதாவது:-

“இந்தியாவில் உள்ள அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். இதற்காக, ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ், 40 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. இதில், 20 கோடி பெண்களுக்கு வங்கிக் கணக்கில் 1,500 ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. 10 கோடியே 75 ஆயிரம் குடும்பங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர். நாட்டு மக்கள் தொகையில் 40 சதவிகிதம் பேர் இதில் அடங்குவர்.

நாடு முழுவதும் 50 சதவிகித மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும், 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சரியான நேரத்தில் ஊரடங்கை அறிவித்து, கோடிக்கணக்கான மக்களின் உயிரை பிரமதர் மோடி காப்பாற்றியுள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக, வேளாண் சட்டத்தை கொண்டு வந்துள்ளார். நாடு, நாட்டு மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக தான் பிரதமர் மோடி பணியாற்றுவார். மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்ததால், மக்கள் ஆதரவில் பல்வேறு மாநிலங்களில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. அதே போன்ற வெற்றியை, தமிழகத்திலும் பெற வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். உங்கள் ஆதரவுடன் அது நிறைவேறும் என எதிர்பார்க்கிறோம்.

தமிழகத்தின் முதன்மைக் கட்சியாக பாஜ வளர, எங்கள் நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள். நிச்சயம் தமிழகத்தில் தாமரை மலரும்”.

இவ்வாறு நட்டா பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *