ஃபேஸ்புக் நிறுவனத்துடன் தகவல்களை பகிர மாட்டோம்..வாட்ஸ் அப் விளக்கம்
பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரத்தை சேமித்து வைக்க மாட்டோம். பயனாளர்கள் தகவல்களை நீக்கவோ, டவுன்லோடு செய்து கொள்ளவோ முடியும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி, ஜன-12

ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது சமீபத்தில் அதனுடைய பிரைவசி கொள்கைகளையும், பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாக அறிவித்தது. பிரைவசி பாலிசி அப்டேட் செய்யவில்லை என்றால் அடுத்த மாதம் முதல் நம்மால் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்த முடியாது என்றும் புதிய விதிமுறைகளை ஏற்காவிடில் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையடுத்து தங்களது தனிப்பட்ட தகவல்களை வாட்ஸ்ஆப் சேமிக்கிறது என்ற அச்சத்திலும் புதிய விதிமுறைகளாலும் பலர் மாற்று செயலியை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த நடவடிக்கை பயனரின் தனிப்பட்ட நண்பர்கள் அல்லது குடும்பத்தினரின் தனியுரிமையை பாதிக்காது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிய விதிமுறைகள் குறித்து விளக்கமளித்துள்ளது.
► வாட்ஸ்ஆப்பில் பயனர்களின் அழைப்புகள் மற்றும் செய்திகள் கண்காணிக்கப்படாது.
► உங்கள் தொடர்புகளிலிருந்து வரும் அழைப்புகள், செய்திகள் கண்காணிக்கப்படாது.
► உங்களுடைய இருப்பிடம் குறித்த தகவல்கள், உங்கள் தொடர்புகள் உள்ளிட்டவை பேஸ்புக்குடன் பகிரப்படாது.
► வாட்ஸ்ஆப் குழுக்கள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும்.
► உங்கள் தரவுகளை நீங்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
► குறுஞ்செய்திகளை அனுப்பியவுடன் மறைய வைக்கும் வசதியை பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப் புதிய விதிமுறைகளினால் பலர் ‘சிக்னல்’ உள்ளிட்ட செயலிகளுக்கு மாற்றி வரும் சூழ்நிலையில் பயனர்களுக்காக வாட்ஸ்ஆப் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
தனிநபர் தகவலை பெறுவதற்கான புதிய கொள்கை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.