ஓட்டுக்காக திமுகவினர் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.. அமைச்சர் S.P.வேலுமணி கண்டனம்

திமுகவினர் ஓட்டுக்காக பொய்ப்பிரசாரம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரித்தார்.

கோவை, ஜன-12

பெண்களை இழிவாகப் பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த சூலூா் திமுக ஒன்றியச் செயலாளரை கண்டித்தும், திமுக மக்கள் கிராம சபையில் பங்கேற்ற பெண்ணைத் தாக்க காரணமாக இருந்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் பொள்ளாச்சி, திருவள்ளுவா் திடலில் அதிமுக மகளிரணி சாா்பில் திங்கள்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதிமுக செய்தித் தொடா்பாளா்கள் வளா்மதி, கோகுலஇந்திரா, கொள்கை பரப்பு துணைச் செயலாளா் நடிகை விந்தியா ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.

இதில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் யாா் தவறு செய்திருந்தாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், ஒருவா் பாதிக்கப்பட்டதை பெரிதாக்கி எந்த ஆதாரமும் இல்லாமல் பொள்ளாச்சியைச் சோ்ந்த 200 பெண்கள் பாதிக்கப்பட்டதாக திமுக கூறுவது பெண்களை இழிவுபடுத்தும் செயலாகும். வாக்குக்காக பெண்களை இழிவுபடுத்துகிறது திமுக.

கோவையில் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பூங்கொடி என்பவா் குண்டா்களால் தாக்கப்பட்டாா். உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறாா். திமுக சூலூா் ஒன்றியச் செயலாளா் ரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தாா். இவா்கள் அதிமுகவினா் மீது குற்றம்சாட்டுகின்றனா். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சட்டப் பேரவை துணைத் தலைவா் தான் முதலில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தாா்.

அதிமுகவில் யாா் தவறு செய்தாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், திமுகவில் தவறு செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. தோ்தலுக்காகவும், வாக்குக்காகவும் திமுகவினா் எதை வேண்டுமானாலும் செய்வாா்கள் என்றாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *