வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்த தம்பதி..! தாய், சேய் பரிதாப பலி..!

பெரம்பலூர், ஜன-11

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி பகுதியை சேர்ந்தவர் விஜயவர்மன். இவரது மனைவி அழகம்மாள். கடந்த ஏப்ரல் மாதம் அழகம்மாள் கர்ப்பமாகி உள்ளார். இதையறிந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் நேரில் வந்து முறையாக பரிசோதித்து சிகிச்சை பெற அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் விஜயவர்மன் அக்குபஞ்சர் படித்துள்ளதால் வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் என தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். மனைவி அழகம்மாள் பிஎஸ்சி நர்சிங் படித்துள்ளதால் கணவரின் பேச்சை ஏற்றுக்கொண்டு மருத்துவ மனைக்குச்செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனையறிந்த சுகாதாரத் துறையினரும் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அதற்கு போலீசாரிடம் பதிலளித்த விஜயவர்மன் அழகம்மாள் தம்பதியினர், “குழந்தை பிறப்பில் எந்தவித அசம்பாவிதம் நேர்ந்தாலும், விபரீதங்கள் ஏற்பட்டாலும் அதற்கு எங்கள் பகுதி சுகாதாரத் துறையினர் பொறுப்பல்ல” என எழுதி கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அழகம்மாளுக்குக் கடும் வயிற்றுவலி ஏற்படவே பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவந்து சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் குழந்தை வயிற்றிலேயே இறந்து அழுகிய நிலையில் இருப்பதால், டெலிவரியில் சிக்கல் இருப்பது தெரியவந்தது. மேலும் அழகம்மாளுக்கு உதிரப்போக்கு ஏற்பட்ட காரணத்தால் தாயையாவது காப்பாற்ற மேல்சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் திருச்சிக்கு செல்லும் வழியிலேயே அழகம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான புகாரின் பேரில், அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *