மதுரையில் எல்.முருகன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விசிக மறியல்
மதுரை, ஜன-11

தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் நம்ம ஊர் பொங்கல் என்ற தலைப்பில் பொங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மதுரை புறநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் திருப்பாலை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தார். அவரை நிர்வாகிகள் மாட்டு வண்டியில் அழைத்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் மக்களுடன் மக்களாக நடைபெற்ற பொங்கல் விழாவில் அவர் கலந்து கொண்டு பொங்கல் வைத்தார்.
இதனை தொடர்ந்து எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது-
தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொய் பிரசாரம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். தி.மு.க.வின் பொய் பிரசாரம் ஒரு போதும் மக்களிடம் எடுபடாது. தி.மு.க.விற்கு 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மிகப்பெரிய தோல்வியை தருவார்கள். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் கனிமொழி முதலில் அவர்கள் கட்சியில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது பற்றி யோசிக்கட்டும். தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடத்தி அதன் அடிப்படையில் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் மகாலட்சுமி, செயலாளர் பேராசிரியர் சீனிவாசன், புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பாலை பெரியார் நகர் பகுதியில் எல்.முருகன் வந்த போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிராண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும் அவர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், பா.ஜ.க.வினர் அத்துமீறி பள்ளிவாசல் முன்பு ஒலிபெருக்கி கட்டியதாகவும், அதனை தட்டி கேட்டபோது பிரச்சினையில் ஈடுபட்டதாகவும் புகார் தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே காலையில் இரு தரப்பினரும் கல், காலணிகளை வீசியும் மோதியதாக கூறப்படுகிறது.