உதயநிதி ஸ்டாலின் விஷம் குடித்த கதையை நாறடிப்போம்.. பா.வளர்மதி அதிரடி பேச்சு..!!

சென்னை, ஜன-9

கடந்த சில நாட்களுக்கு முன், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சசிகலாவின் காலில் எடப்பாடி விழுந்தது பற்றிப் பேசியது சர்ச்சையாகியது. ஏராளமானோர் இதற்காக உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அதிமுக பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான வளர்மதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவில் அமைப்புச் செயலாளர் வளர்மதி கூறுகையில்,

“ நடக்க இருக்கிற 2021 பொதுத் தேர்தல் என்பது ராமாயணப் போர். எடப்பாடியும், ஓ.பிஎஸ் சும் ராமர் லட்சுமணர்கள். ராவணன் கூட்டம் என்பது மு.க.ஸ்டாலின் கூட்டம். எம்.ஜிஆர் அன்றைக்கே கருணாநிதியை தீய சக்தி என்று சொன்னார்.இந்தத் தேர்தலோடு திமுகவின் கதை முடிக்கப்பட வேண்டும்.

நம்மைப் பார்த்து ஊழலாட்சி என்று ஸ்டாலின் குடும்பம் வீதி வீதியாக சென்று சொல்லிக் கொண்டிருக்கிறது. ஊழலாட்சி என்று சொல்லக் கூடிய அந்த கூட்டமெல்லாம் உத்தமர் காந்தி வீட்டுப் பேரன்களா? கருணாநிதி வீட்டுப் பிள்ளைகள்தானே… ஊழல் செய்தே பழக்கப்பட்டவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். எங்களைப் பார்த்து ஊழல் என்பது கேலியாக இருக்கிறது.

சில நாட்களாக ஸ்டாலின் கூட்டம் அண்ணன் எடப்பாடியாரைப் பற்றி மிகக் கேவலமாக அருவெறுப்பாக பேசித் திரிகிறார்கள். நான் ஒன்றை மட்டும் சொல்லுவேன்…அண்ணன் எடப்பாடியாரைப் பற்றி தாறுமாறாக பேசினால் நாங்களும் திருப்பிப் பேசுவோம் நாங்கள் பேசினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.

உங்களைப் பற்றித் தெரியாதா…. எடப்பாடியாரைப் பற்றி பேசும் உதயநிதியே…நீ விஷம் குடித்தாயே ஏன் குடித்தாய்? யாருக்காக குடித்தாய்? சொல்லட்டுமா…கதை நாறிப் போய்விடும். நாங்கள் பேசினால் நாடு சிரித்துப் போய்விடும். தங்கத்தின் தங்கமாக விளங்கும் எங்கள் அண்ணன் எடப்பாடியாரைப் பார்த்து பேசினால் நாக்கு அழுகிப் போய்விடும்.

எடப்பாடி தீரன் சின்னமலை என்றால் ஓபிஎஸ் பூலித் தேவன். இந்த இயக்கத்தை இருவரும் வழி நடத்துகிறார்கள். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பொதுத் தேர்தலில் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுத் தரவேண்டும். சமீபத்தில் அண்ணன் பி. ஹெச். பாண்டியன் சிலை திறப்பு விழாவில் ஒரே காரில் இருவரும் வந்தார்களே… மருது சகோதரர்களைப் போல இருவரும் வந்தார்கள். அப்படிப்பட்ட காட்சி பல பேருக்கு வயிற்றெரிச்சலைக் கிளப்பியிருக்கிறது. அவர்கள் வயிறு எரிந்துகொண்டே இருக்கட்டும். நாம் ஒற்றுமையாக இருந்து எடப்பாடியாரை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும்”.

இவ்வாறு வளர்மதி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *