சென்னை பள்ளி மாணவிகள் சுகாதாரத் தூதுவர்களாக நியமனம்

சென்னை, செப்டம்பர்-6

சென்னையில் பயிலும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சுகாதாரத் தூதுவர்களுக்கான அடையாள அட்டையை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர்.

சென்னை ரிப்பன் மாளிகையில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஊரக வளார்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

டெங்கு மற்றும் தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்க ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தொற்றுநோய் பாதிப்புள்ள இடங்களில் சுகாதாரத்துறையுடன் இணைந்து சிறப்புக்குழுக்கள் அமைத்து போர்க்கால முறையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

சென்னையை தவிர்த்து 14 மாநகராட்சிகள் மற்றும் 121 நகராட்சிகளில் கொசுப்புழுக்கள் உருவாக ஏதுவான இடங்கள் கண்டறியப்பட்டு ரூ.11.07 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், மற்றும் சுகாதாரத்துறை அரசு செயலர் பீலா ராஜேஷ் மற்றும் சென்னை பெருநகர ஆணையர் பிரகாஷ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *