திமுகவில் என் வீடு தாக்கப்பட்டபோது ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?.. குஷ்பு அதிர்ச்சி தகவல்
பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு உரிமையில்லை. திமுகவில் இருந்தபோது என் வீடு தாக்கப்பட்டதை மு.க.ஸ்டாலின் கண்டிக்கவில்லை என பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை, ஜன-9

மதுரை மாநகர் பாஜக சார்பில் தெப்பக்குளம் நடன நாயகி மந்திர் வளாகத்தில் இன்று நம்ம ஊர் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டார். அப்போது குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பாஜக வளர்ந்துள்ளது. தமிழகத்தில் பாஜக எங்கிருக்கிறது என்று கேட்டனர். இப்போது தெருக்கு தெரு பாஜக கொடி பறக்கிறது. 2021- தேர்தலில் பாஜக வெற்றியை அனைவரும் பார்க்கப்போகின்றனர்.
பேரவைத் தேர்தலில் கட்சி தலைமை சொன்னால் மு.க.ஸ்டாலின் அல்ல யாரை எதிர்த்து போட்டியிட சொன்னாலும் போட்டியிடுவேன். பேரவைத் தேர்தலில் பாஜக எத்தனை இடத்தில் போட்டியிடும் என்பதை மாநில தலைவர் தான் அறிவிப்பார். திமுக தலைவர் கருணாநிதி பெண்களை மதிப்பவர். ஜெயலலிதாவை மரியாதையாக பேசுபவர். நான் திமுகவில் சேரும் போது பொதுக்கூட்டங்களில் யாரையும் இழிவுபடுத்தியோ, தரக்குறைவாகவோ பேசக்கூடாது என என்னிடம் சொன்னார். அவர் குடும்பத்தில் இருந்து வந்துள்ள உதயநிதி, பெண்களை தவறாக பேசியது அதிர்ச்சியளிக்கிறது.
பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளும்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் யாருக்கு தொடர்பு இருந்தாலும் அவர்களை கைது செய்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் கொடுமைகளுக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.
அதே நேரத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்தோ, ஊழல் குறித்தோ பேசுவதற்கு திமுகவுக்கு உரிமையில்லை. நான் திமுகவில் இருந்த போது என் வீடு மீது கல்வீசப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்த போது, ‘சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன், இப்போது வர முடியாது’ என்று சொன்னார். சொந்த கட்சியை சேர்ந்த பெண்ணையே காப்பாற்ற முடியாதவர் மற்ற பெண்களை எப்படி காப்பாற்றுவார்? தமிழகத்தை எப்படி காப்பாற்றுவார்?
திரையங்குகளில் நூறு சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என நானும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தேன். இருப்பினும் கரோனா விதிமுறைகள் அமலில் இருப்பதால் தமிழகத்தில் மட்டும் அவ்வாறு வழங்க முடியாது என உள்ளது. இதனால் நூறு சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கியது ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் படம் வருவதால் இப்படி செய்கிறார்கள் என்று கூறி அரசியல் செய்யக்கூடாது. தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க தருமாறு நான் ஏன் ரஜனியிடம் கேட்க வேண்டும்.
தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டுமோ, அவர்களை ரஜினி ஆதரிப்பார். பாஜகவுக்கு யாரும் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதையும் தாண்டி பாஜக வளர்ந்துள்ளது. பிரதமர் மோடி மட்டும் குரல் கொடுத்தால் போதும்.
தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வலியுறுத்துவேன். மற்ற கட்சிகளை விட பாஜகவில் அதிகளவில் பெண்கள் உயர் பதவியில் உள்ளனர். பிரதமர் மோடியும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். திருமாவளவன் பரபரப்புக்காக பேசுவதை கைவிட்டு, மக்கள் நலனுக்காக பேச வேண்டும்.
இவ்வாறு குஷ்பு கூறினார்.