முதல்வர் வேட்பாளர் எடப்பாடியார்.. கூட்டணி குறித்து முடிவெடுக்க ஓபிஎஸ்-ஈபிஎஸ்ஸுக்கு அதிகாரம் – அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு அதிமுக பொதுக்குழு ஒப்புதல் அளித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணியை இறுதி செய்ய ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு அதிகாரம் வழங்குவதாகவும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை, ஜன-9

அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில், சென்னை மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று காலை 8.50 மணிக்குத் தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் 4,000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு, செயற்குழுவிற்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 9 மணிக்குத் தொடங்குவதாக இருந்த பொதுக்குழு 2 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.
காலை முதலே பொதுக்குழு நடக்கும் வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தின் முன் அதிமுகவினர் திரண்டிருந்தனர். கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் காலை முதலே தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அழைப்பிதழைக் காண்பித்தவுடன் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை முடித்து உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் முதலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அரங்கிற்கு வந்தனர். கூட்ட மேடையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுடன் முன்னணித் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். ப.வளர்மதி வரவேற்புரையாற்றினார். இரங்கல் தீர்மானத்தை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வாசித்தார்.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோன்று அதிமுக தலைமையில் தேர்தல் வியூகம், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவருக்கும் அதிகாரமளிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் மாகாண கவுன்சில் முறையை ரத்து செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகித முன்னுரிமை என்னும் நெறிமுறையை முறைப்படுத்திய தமிழக அரசுக்கு பொதுக்குழு கூட்டத்தில் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்திய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் அமைத்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
நகர்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்றிருப்பதற்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்
நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.600 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடு தழுவிய அளவில் சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலமாக தமிழகத்தை முன்னேற்றிய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.2,500 கொடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
தமிழ் நாட்டில் ஒரே குடும்பத்தின் ஏக போக வாரிசு அரசியலை வீழ்த்துவது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.