போலியோவை விரட்டியது போல் கொரோனாவையும் இந்தியாவில் இருந்து விரட்டுவோம்.. ஹர்ஷ்வர்தன்

போலியோவை விரட்டியது போல் கொரோனாவையும் இந்தியாவில் இருந்து விரட்டுவோம் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜன-8

நாடு முழுவதும் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்துகள். கொரோனா நோய்த்தொற்றை தமிழ்நாடு கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியது முதல் முழுவீச்சில் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாட்டில் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் விகிதம் அதிகரித்தது. 2300 ஆய்வகங்கள் மூலம் கொரோனா தொற்று பரிசோதனை நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், நாடு முழுவதும் இன்று இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. இரண்டு நாள்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்க மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முன்கள பணியாளர்கள், முதியவர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போடப்படும். இந்தியா குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. போலியோவை விரட்டியது போல் கொரோனாவையும் நாட்டில் இருந்து விரட்டுவோம். மேலும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் போலியோ தடுப்பு மருந்து வழங்கப்படும்.

என்று ஹர்ஷ்வர்தன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *