சுஜித் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

சென்னை.அக்டோபர்.29

 சுஜித் மறைவு செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
 
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய  இரண்டரை வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி, 80 மணி நேரமாக நடைபெற்றது, இறுதியில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு சடலமாக மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடல், பொது மக்கள் அஞ்சலிக்கு பிறகு  அடக்கம் செய்யப்பட்டது.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தின் உடல் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் சிறுவனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து, கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சுஜித்தின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளாமான பொதுமக்கள் கண்ணீர் மல்க சிறுவனுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், குழந்தையின் இழப்பை தாங்க முடியாமல் சுஜித்தின் தாய் கதறி அழுதார். பின்னர் சுஜித்தின் உடல் கிறிஸ்துவ முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு, பாத்திமாபுதூர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே, சுஜித்தின் உயிரை பலிவாங்கிய ஆழ்துளை கிணறும், குழந்தையை மீட்பதற்காக போடப்பட்ட குழியும் சிமெண்ட் கான்கிரீட் கலவையால் மூடப்பட்டன.

இந்நிலையில், சிறுவன் சுஜித் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித் சடலமாக மீட்கப்பட்டான் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. குழந்தை சுஜித் இறந்ததற்காக வருந்துகிறேன். துக்கமடைந்துள்ள சுஜித்தின் பெற்றோர், உறவினர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துள்ளார். 

மேலும், ஆழ்துளை கிணறு தொடர்பான வழிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும். இதில் கவனக்குறைவு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க ஆட்சியர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *