வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. விளக்கமளித்த ஓ.பி.எஸ்
சென்னை, ஜன-8

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பதாக, சமூக வலைதளங்களில் சிலர் கருத்துகளை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இடஒதுக்கீடு தரக்கூடாது எனவும், அப்படி தந்தால் அது மற்ற சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டை பாதிக்கும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாக பாமகவினர் குற்றம்சாட்டி அவரை விமர்சித்து வந்தனர்.
இதற்குப் பதில் அளிக்கும் விதமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வன்னியர் சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை சில விஷமிகள் பரப்பி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த கருத்துகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். வன்னிய சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு நான்இதுவரையிலும் நம்பிக்கைக்கு உரியவனாகவே இருந்திருக்கிறேன். இனிவரும் காலங்களிலும் நமது சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.