திமுக கூட்டத்தில் தலித் பெண் மீது தாக்குதல்..டிஜிபி, கோவை எஸ்.பி.க்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்
கோவையில் திமுகவினர் நடத்திய மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பெண் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, தமிழக டிஜிபி மற்றும் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தினர் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கோவை, ஜன-7

கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் பகுதியில், திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் கடந்த 2-ம் தேதி நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் மைல்கல் பகுதியைச் சேர்ந்தவரும், அதிமுக கட்சியின் கோவை தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகியுமான பூங்கொடி என்பவர் கலந்துகொண்டு கேள்விகளை எழுப்பினார். அங்கிருந்த திமுகவினர், கூட்டத்தில் பங்கேற்ற பூங்கொடியை அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தவிர அவருடன் வந்த ராஜன், மற்றொரு பூங்கொடி, மினி, மகேஸ்வரி உள்ளிட்டோரும் தாக்கப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாகத் தாக்குதலுக்கு உள்ளான பூங்கொடி அளித்த புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் காவல்துறையினர் திமுகவினர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி, எஸ்சி, எஸ்டி பிரிவில் வழக்குப் பதிய வேண்டும் எனத் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாணசுந்தரம் சில தினங்களுக்கு முன்னர் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பாகத் தமிழகக் காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி, கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு ஆகியோருக்கு இன்று (7-ம் தேதி) நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், ”மேற்கண்ட சம்பவத்தின்போது, பூங்கொடி தாக்கப்பட்ட வழக்குத் தொடர்பாகவும், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் உரிய அறிக்கையை வரும் 15 நாட்களுக்குள் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.