அழகிரி கட்சி ஆரம்பித்தால் திமுக மூன்றாக உடையும்.. எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஈரோடு, ஜன-7

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்துக்குளி, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரச்சலூர், ஓடாநிலை மற்றும் சென்னிமலை ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துக்கொண்டு முதல்வர் பழனிசாமி பேசியதாவது:-

“திமுக தலைவர் ஸ்டாலின் இன்றைக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கிறார். எங்கள் மீது ஊழல் குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறார். அவர் கூறிய ஊழல் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள, டெண்டர் ஒரு வருடங்களுக்கு முன்பே ரத்து செய்யப்பட்டு விட்டது. பிறகு எவ்வாறு அந்த டெண்டரில் ஊழல் செய்ய முடியும். ஏற்கனவே நான் கூறினேன் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினீர்களே, தைரியம் இருந்தால் நேரில் வாருங்கள், சந்திக்கலாம், பேசலாம் என்று சொன்னால்.

“நீதிமன்றத்திலே வழக்கு இருக்கிறது வாபஸ் வாங்கினால் தான் வருவோம்” எனக் கூறுகின்றார். இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் செயல். நான் கூறியதைப்போல நீங்கள் வாருங்கள், பேசுங்கள், எது தவறு, எது சரி என்று சொல்லுங்கள்.

கருணாநிதி முதல்வராக இருக்கின்றபோது, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்தின் மூலம் பொது வாழ்வில் இருக்கக் கூடிய எம்.எல்.ஏ., எம்.பி., அரசு ஊழியர்கள், அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த யார், யாரெல்லாம் டெண்டர் எடுக்கக்கூடாது என்று, அரசினுடைய சலுகைகளைப் பெறக்கூடாது என்று ஒரு பட்டியலை மத்திய அரசிடம் வாங்குகிறார்.

அந்தப் பட்டியலை படித்துக் காட்டுகிறேன், அப்பொழுதாவது ஸ்டாலின் தெரிந்து பேசட்டும். ஏனென்றால் எதிர்கட்சி தலைவருக்கு ஒன்றுமே தெரியாது. உச்சநீதிமன்றமே இவர்கள் போட்ட வழக்கு சரியில்லை என்று கூறி, தடையாணை வழங்கியிருக்கிறர்கள். உச்சநீதிமன்ற நீதியரசரை விடவா இவர் அறிவாளி. எங்கு பார்த்தாலும் இதையே பேசிக் கொண்டிருக்கிறார்.

டெண்டர் யார் யாருக்கெல்லாம் கொடுக்கக் கூடாது என்று கூறுகிறேன். இதனை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அரசு பணியில் இருந்தாலும் சரி, எம்எல்ஏ, எம்.பி., அமைச்சர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் தந்தை, வளர்ப்புத் தந்தை, தாய், வளர்ப்புத்தாய், கணவன், மனைவி, மகன், தத்துமகன், மகள், தத்து மகள், சகோதரன், தத்து சகோதரன், சகோதரி, தத்து சகோதரி, மனைவியின் தந்தை – தாய், கணவனின் தந்தை – தாய், சகோதரனின் மனைவி, சகோதரியின் கணவன், மகளின் கணவர், மகனின் மனைவி ஆகியோருக்குத்தான் டெண்டர் கொடுக்கக் கூடாது. இப்படி இருக்க நாங்கள் டெண்டர் கொடுத்தது தவறு என்று எப்படிக் கூறுகிறார் ஸ்டாலின். சட்டரீதியாக எங்களுடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தவறான செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார். நாங்கள் கொடுத்தது இ-டெண்டர். அமெரிக்காவில் இருந்து கூட இணையம் மூலமாக டெண்டரில் பங்கெடுக்கலாம்.

ஆனால் திமுக ஆட்சியில் ஒரு பெட்டி வைத்திருப்பார்கள். டெண்டர் நோட்டீஸ் யாருக்கு வழங்கப்படுகிறதோ அவர்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும். யார் வேண்டுமனாலும் பங்குகொள்ளக்கூடிய எங்களுடைய முறை சிறந்ததா? அல்லது குறிப்பிட்டவர்கள் மட்டுமே பங்குகொள்ளக்கூடிய அவர்களுடைய முறை சிறந்ததா? மக்கள் நீங்களே எண்ணிக்கொள்ளுங்கள்.

ஸ்டாலின் குடும்பத்தில் உள்ள 58 உறவினர்களின் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். கருணாநிதி சென்னை வருகின்ற போது, திருட்டு ரயில் ஏறி வந்தார் என்பதை நாங்கள் சொல்லவில்லை கவிஞர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். ஆனால் நான் வைத்திருக்கும் சொத்து 1943-லேயே எங்கள் தாத்தா வைத்திருந்த சொத்து ஆகும்.

நாங்கள் பரம்பரையாக விவசாயி. விவசாயியை குறைசொல்லுபவன் என்றைக்குமே முன்னுக்கு வந்ததாக சரித்திரமே கிடையாது. ஸ்டாலின் இந்த ஆட்சியை கலைக்கப் பார்த்தார், சில எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பார்த்தார். விலைக்கு வாங்கினார், இன்றைக்கு அந்த எம்எல்ஏ நடுத்தெருவில் நிற்கிறார்.

அதிமுக மூன்றாக உடையும் என்று கூறினார் ஸ்டாலின். முதலில் உங்கள் கட்சியைப் பாருங்கள். அழகிரி கட்சி ஆரம்பித்தால் உங்கள் கட்சி மூன்றாக உடையும். வினை விதைத்தவன் வினை அறுப்பான். அன்றைக்கு எங்களுக்கு வினை நினைத்தாய், இன்றைக்கு அது உனக்கு நடக்கின்றது.

திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டினார்கள். அதற்காக ரூ.200 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டது. ஆனால் பின்னர் ரூ.430 கோடி மதிப்பிற்கு டெண்டர் வழங்கி இருக்கிறார்கள். ஒரு கட்டடம் கட்ட டெண்டர் விடப்பட்டால் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கூடுதல் செலவினம் ஏற்படலாம். ஆனால் 120 சதவீதம் கூடுதலாக கொடுத்துள்ளது இது ஊழல் தானே? அதற்குபோய் தடையாணை வாங்கி வைத்துள்ளீர்கள்.

இது தான் ஊழல். இதைச் சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது. உலகத்தையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரமில் ரூ.1,75,000 கோடி அளவுக்கு ஊழல். திமுக கட்சியைச் சேர்ந்த ராசா மத்திய அமைச்சராக இருந்த போது ஊழல் நடைபெற்றுள்ளது. இதில் அவர்கள் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி கைமாறியுள்ளது. இதெல்லாம் சொன்னால் எங்கள் மீது பொய் புகார் தெரிவிக்கின்றனர்”.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *