ஆபாச பேச்சால் சிக்கலில் சிக்கிய உதயநிதி..! குவியும் கண்டனங்கள்..!!

சென்னை, ஜன-07

திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்வில், “மோடிக்கு எடுபிடியாக ஆட்சி செய்து வருவதால் எடப்பாடி ஆட்சியை எடுபிடி ஆட்சி எனக் கூறுகிறோம். டெட்பாடி ஆட்சி என்கிறார்கள். சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து விழுந்து கெடந்தாரு. விட்டா அந்த அம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு என்று கூறி வீடியோ ஒன்று வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கேட்டு நிகழ்வில் பங்கு பெற்றிருந்த கட்சி நிர்வாகிகளும் சிரித்தனர். 36 விநாடிகள் மட்டும் ஓடக்கூடிய இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், உதயநிதிக்கு எதிராக கண்டனங்கள் வலுக்கின்றன.

சசிகலாவின் சகோதரி மகனும், அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன், உதயநிதிக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார். கண்ணியத்திற்கும் தி.மு.கவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி என்று கூறியுள்ளார்.

நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி. பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிப்பதாக கண்டனம் தெரிவித்தார்.

நடிகையும் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம், பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா எனக் கேள்வி எழுப்பினார். எவ்வளவு அருவருப்பான வார்த்தை அது. உதயநிதி சொன்னது நகைச்சுவை அல்ல. பெண்களைப் பற்றி இரட்டை அர்த்தத்தில் தெளிவாகக் கூறிய மோசமான வார்த்தைகள் அவை. வெறுப்பு அரசியலை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக திமுகவால் எதையாவது பேச முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.

கோவை ஸ்மார்ட் சிட்டி லிமிடேடின் கூடுதல் இயக்குனர் கிருத்திகா, “அருவறுப்பானது. இதுபோன்ற பேச்சை நாங்கள் கேட்க விரும்பவில்லை. இதுக்கு மேல ஒரு அசிங்கம் உண்டா?” என உதயநிதியின் பேச்சுக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்தார்.

நடிகை கஸ்தூரி, எப்போதும் அதே நினைப்புதான் போல என தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுபோலவே உதயநிதிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் டுவிட்டர் பதிவில்;- சசிகலா அவர்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு மிகவும் ஆபாசமானது மட்டுமல்ல, அருவருக்கத்தக்கது. ஒரு பெண்மணியை கேவலமாக பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தண்டனையை பெற்று தர வேண்டியது தமிழக அரசின் கடமை. முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பேரன், முதல்வராக துடிக்கும் ஸ்டாலின் அவர்களின் மகன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இப்படி பேசியிருப்பது தமிழத்திற்கே மிக பெரும் அவமானம். தி மு கவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் இதை வன்மையாக கண்டிக்க வேண்டும். மு க ஸ்டாலின் அவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தி மு க கூட்டணி கட்சியினரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த செயலை கண்டிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *