திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்தது விதிமீறல்.. தமிழக அரசுக்கு மத்திய உள்துறை கடிதம்
தமிழக தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமுறை மீறல். மத்திய அரசு வெளியிட்ட கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்காதது ஏன்?. மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை, ஜன-6

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் மக்களின் வாழ்க்கைதரம் மற்றும் பொருளாதாரம் பாதிக்காத வகையில் அடிக்கடி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிகம் கூடும் இடங்களான தியேட்டர்கள், கல்லூரி, பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. குறிப்பாக தியேட்டர்களில் மூடப்பட்ட அரங்குகளுக்குள் நீண்ட நேரம் மக்கள் அமர்ந்திருப்பதால் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இருந்த போதிலும், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குரல் எழுப்பியதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த மாதம் தியேட்டர்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அப்போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் போதிய வருமானம் இல்லாததால் பல தியேட்டர்களை அதன் உரிமையாளர்கள் இயக்கவில்லை. 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தால் மட்டுமே தியேட்டர்களில் வருமானம் கிடைக்கும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர் கோரிக்கை வைத்து வந்தனர். தொடர்ந்து, தமிழகத்தில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க நேற்று அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதிக்கூடாது என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 100% இருக்கைகளுக்கு அனுமதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வரும் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. 100% அனுமதி அளிக்கப்பது மத்திய அரசின் அறிவுறுத்தலை நீர்த்துப்போகச் செய்யும். திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப புதிய வழிகாட்டு அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.