தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, ஜன-6

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ;-

“வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய பகுதியில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜன.07 மற்றும் ஜன.08 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜன.09 தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜன.10 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

ஜனவரி 06 மற்றும் 07 தேதிகளில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியக் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *