நடிகை சித்ரா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றம்
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, ஜன-6

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா பூந்தமல்லி அருகே உள்ள தனியார் விடுதியில் கடந்த டிசம்பர் மாதம் 9-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அவரின் கணவர் ஹேம்நாத்தை நாசரத்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று சிறையில் உள்ள ஹேம்நாத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக ரூ.1.05 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்தனர். பின்னர் ஹேம்நாத்தை, மத்திய குற்றப்பிரிவினர், மோசடி வழக்கில் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து தற்போது விசாரித்து வருகின்றனர். 2 நாள் விசாரணை முடிவில் தான் ஹேம்நாத் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கை சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக நடிகை சித்ரா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று முதல்வர் தனிப்பிரிவில் சித்ராவின் தாய் விஜயா மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.