பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேர் கைது..!
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி, ஜன-6

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல இடங்களில் இளம்பெண்களை அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், விசாரணையை சி.பி.ஐ. கையில் எடுத்தது. சி.பி.ஐ. கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேலும் 3 பேர் பிடிபட்டிருக்கிறார்கள். அதிமுக பொள்ளாட்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள் ஹேரன் பால், பாபு என்கின்ற மைக் பாபு ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி உள்பட 3 பேரும் சற்றுநேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். கைது செய்யப்ட்ட பொள்ளாச்சியை சேர்ந்த 3 பேரையும், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஐ விசாரணை வளையத்தில், மேலும் 3 சிக்கி இருக்கும் நிலையில், பல புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.