மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அடுத்தகட்ட மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் அறிவிப்பு

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் குறித்து திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை, ஜன-5

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இக்கூட்டங்களில், தமிழக அரசை விமர்சித்துப் பேசி வருகிறார். மேலும், ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற பெயரில் ஒரு வரித் தீர்மானமும் நிறைவேற்றப்படுகிறது.

இந்நிலையில், அடுத்தகட்டமாக, தருமபுரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை, தேனி, சென்னை ஆகிய மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என, திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”வரும் 7-ம் தேதி காலை, தருமபுரி மேற்கு மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியிலும், அன்றைய தினம் மாலை சேலம் மேற்கு மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியிலும், 8-ம் தேதி காலை நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியிலும், அன்றைய தினம் மாலை புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியிலும் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.

9-ம் தேதி காலை மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியிலும், அன்றைய தினம் மாலையில் தேனி வடக்கு மாவட்டம் போடி சட்டபேரவைத் தொகுதியிலும், 10-ம் தேதி காலை சென்னை வடக்கு மாவட்டம் ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியிலும் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *