மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் செய்வோம்.. கமல் அதிரடி பேச்சு

தருமபுரி, ஜன-5

தருமபுரியில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற்ற இந்தக் கூட்டங்களில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் கமல் பேசியதாவது:-

“தமிழகத்தில் ஏராளமான நேர்மையானவர்கள் உள்ளனர். அவர்களை நம்பியே அரசியலுக்கு வந்துள்ளேன். மக்களுக்கு என்ன தேவை, நல்ல ஆட்சி எது என்றெல்லாம் ஆட்சிக்கு வருவோர் யோசித்துக் கொண்டு இருக்கத் தேவையில்லை. மக்களைக் கேட்டாலே தங்களின் தேவைகள் என்ன, எது நல்லாட்சி என்பதைக் கூறிவிடுவார்கள்.

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வரும்போது தமிழக மக்களின் கல்வித் தரம், வாழ்க்கைத் தரம் உயரும். அரசு என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்கானது. சேவைகளை மக்கள் கெஞ்சிக் கேட்டுப் பெறத் தேவையில்லை. அதுபோன்ற ஒரு ஆட்சியை வழங்க மக்கள் நீதி மய்யம் என்ற அற்புதத் தேரை அனைவரும் சேர்ந்து இழுங்கள்.

இளைஞர்களும், இளம் பெண்களும், மகளிரும் தேர்தலின்போது வாக்குச்சாவடிக்குத் தவறாமல் செல்லுங்கள். எங்கள் கரங்களை வலுப்படுத்துங்கள். தமிழகத்திலேயே முதன்முதலாக தருமபுரியில் தொடங்கப்பட்ட ‘தொட்டில் குழந்தை திட்டம்’ நல்லதொரு திட்டம்தான். ஆனால், தொட்டில்கள் அவரவர் வீடுகளில்தான் ஆட வேண்டும். அதற்கு வறுமைக் கோடு அழிந்து தமிழகத்தில் செழுமைக் கோடு உருவாக்கப்பட வேண்டும்.

உங்கள் அனைவரையும் தலைவர்களாகவும், என்னை உங்களின் கருவியாகவும் நான் பார்க்கிறேன். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் திறந்த சாக்கடைகள். ஆரோக்கியம் பற்றிப் பேச அருகதை இல்லாத அரசு இங்கு நடக்கிறது.

எங்கள் ஆட்சியில் வீட்டுக்கு ஒரு கணினி தருவோம். அது இலவசமல்ல. மனித வளத்தில் அரசு செய்யும் முதலீடு அது. எங்கள் ஆட்சியில் இந்தியாவின் தலைவாசலாக தமிழகம் மாறும். இந்தியாவின் தென்னக நலம் நாடும் கட்சியாக மக்கள் நீதி மய்யம் இருக்கும். எனவே, நேர்மையான ஆட்சி நடக்க, நேர்மையானவர்கள் ஆட்சியில் அமர மக்கள் நீதி மய்யத்தின் கரங்களுக்கு வலு சேருங்கள்”.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *