முதல்வர் பதவி வெறியில் ஸ்டாலின் இருக்கிறார்.. அமைச்சர் S.P.வேலுமணி பதிலடி

கோவை, ஜன-4

தமிழக அரசு, முதல்வர், அமைச்சர்கள் மீது அவதுாறு பரப்பும் தி.மு.க.,வை கண்டித்து, அ.தி.மு.க., கண்டன பொதுக்கூட்டம், கோவை தொண்டாமுத்துாரில் நேற்று நடந்தது.

இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

அ.தி.மு.க., ஆட்சியை கலைக்க எவ்வளவோ முயற்சிகள் நடந்தன. கட்சியை இணைக்க நானும், அமைச்சர் தங்கமணியும் உறுதுணையாக இருந்தோம். வரிசையாக பெரிய கூட்டணி அமைத்தோம். இந்த கோபம்தான் ஸ்டாலினுக்கு எங்கள் மீது. பொய், புரட்டு பேசி முதல்வர் நாற்காலியை பிடிக்கும் ஆசையில் ஸ்டாலின் உள்ளார்.தேர்தல் சமயத்தில் பொய் பேசி மக்களை கவர்ந்து ஓட்டு வாங்கிய தி.மு.க., கோவைக்கு எதுவும் செய்யவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில், 50 ஆண்டுகால வளர்ச்சி தந்துள்ளோம். அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு நிதி, விமான நிலைய விரிவாக்கம், பாலங்கள், சாலை என திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். செம்மொழி மாநாடு நடத்தி அரசு நிதியை வீணடித்தது தி.மு.க., ஆட்சியில்தான். ஸ்டாலின் உள்ளாட்சித்துறையில் இருந்தபோது எதுவும் மக்களுக்கு செய்யவில்லை. துறையை பற்றியே அவருக்கு தெரியாது. முதல்வராகி என்ன செய்யப்போகிறார். கிராம சபை கூட்டம் நடத்தும்போது அவர் வாங்கிய மனுக்கள் அனைத்தும் குப்பை தொட்டிக்குதான் சென்றது; அந்தந்த துறைகளுக்கு வரவில்லை. நாங்கள் மனசாட்சியுடன் பணியாற்றியுள்ளோம். மக்கள் தேவைகளை நிறைவேற்றியுள்ளோம். என்றைக்கும் ஸ்டாலின் முதல்வரே ஆகமுடியாது.

இவ்வாறு, அவர் கூறினார்.

பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

கருணாநிதியின் கடனை அடைக்க படத்தில் நடித்து எம்.ஜி.ஆர்., உதவினார். இன்று இவ்வளவு பணம் தி.மு.க.,வுக்கு எங்கிருந்து வந்தது. ஊழல் கட்சி என்றால் திமுக.,தான். ஸ்டாலின் இங்கு வந்து அ.தி.மு.க.,மீது ஊழல் குற்றம் சாட்டுகிறார். இங்கு நடந்த கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். தி.மு.க.,வுக்கு ஏழரை ஆரம்பித்துவிட்டதால் ஸ்டாலின் தொண்டாமுத்துார் வந்துள்ளார்.தி.மு.க.,வின் கதையை இந்த தேர்தலோடு முடித்து மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இந்து கடவுள்களை பழித்துவிட்டு, இந்துக்களிடமே ஓட்டை வாங்குவற்கு தி.மு.க., நாடகமாடிக்கொண்டிருக்கிறது; மக்கள் ஏமாந்துவிடக்கூடாது.

இவ்வாறு, அவர் பேசினார்.

அ.தி.மு.க., துணை கொள்கை பரப்பு செயலாளர் விந்தியா பேசுகையில், ”மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தும் தி.மு.க., மக்களுக்காகதான் நடத்த வேண்டும். தி.மு.க., வினர் மட்டும்தான் மக்கள் என்றால் மற்ற கட்சியினர் மக்கள் இல்லையா. கேள்வி கேட்டால் பதில் சொல்பவர்தான் தலைவர். கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண் அடித்து வெளியே விரட்டப்பட்டுள்ளார். ஸ்டாலின் எப்போதும் முதல்வர் ஆக முடியாது என அவரது அண்ணன் அழகிரியே கூறிவிட்டார். ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்ட ஒரே கட்சி தி.மு.க.,தான். தேர்தல் சமயத்தில் மட்டுமே தி.மு.க., ‘டிராமா’ போடும்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *