2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடக்கம்..!

தமிழக ரேஷன் கடைகளில் 2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடங்கியது.

சென்னை, ஜன-4

பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக , தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பும், பரிசுத் தொகையும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதுவரை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு, 2 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகையுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 20 கிராம் உலர் திராட்சை , முழு நீள கரும்பு மற்றும் துணிப்பை ஆகியவை அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக வீடு வீடாக முன்கூட்டியே டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது.

டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில், பயனாளர்கள் ரேஷன் கடைக்குச் சென்று பணம் மற்றும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை பெற வருவோர், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 10 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் 2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடங்கியது. திருவாரூர் மன்னார்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகிய பொருட்கள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு பண்டக சாலை மூலம் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் அதனை எடைக்கு ஏற்ப ‘பேக்கிங்’ செய்து துணிப்பையில் போட்டு தயாராக வைத்துள்ளனர். எனவே ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை மட்டும் எடை போட்டு வழங்கப்படுகிறது.

ரூ.2,500 வெளிப்படையாக கையில்தான் வழங்க வேண்டும். கவரில் போட்டு வழங்க கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *