பள்ளிகள் திறப்பு எப்போது?..இன்று முதல் கருத்துக் கேட்பு..

பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர், மாணவர்களிடம் இன்று முதல் இவ்வார இறுதிவரை கருத்து கேட்கப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கொட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு, ஜன-4

ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“பள்ளிகள் திறந்தவுடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘டேப்’ வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் நடைபெறும். அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் கருத்துகளை அறிந்தபின்பு, பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர்தான் முடிவு எடுக்க வேண்டும். அவர் எப்போது அறிவித்தாலும், பள்ளிகளைத் திறக்கத் தயார் நிலையில் வைத்துள்ளோம். மேலும், பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக, பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்துக் கேட்பு இன்று தொடங்கி இந்த வார இறுதி வரை நடைபெறும்.

பள்ளி தொடங்குவதற்கு முன்பே சீருடை, பாடப்புத்தகம், சைக்கிள் போன்றவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. சுகாதாரத்துறை அறிவுரைக்கு ஏற்ப மாணவர்கள் இடைவெளி விட்டு அமரும் வகையில் வகுப்பறைகள் சரி செய்து வைக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் கூடுதலாக மாணவர்கள் வருகின்றபோதுதான் கழிப்பறைகள் பற்றாக்குறை ஏற்படும். தற்போது குறைந்த அளவு வகுப்பறைகள் திறக்க மட்டுமே முதல்வர் முடிவுகள் மேற்கொள்ள இருக்கிறார். முதல்வர் உத்தரவுப்படி கணினி ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கல்விக் கடன் ரத்து செய்யப்படுமா என்பது தேர்தல் வரும்போதுதான் தெரியும்.

பொங்கல் பண்டிகைக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணிக் காலம் முடிவுற்றவர்களுக்கு பணப்பலன் வழங்குவது குறித்து அனைத்துத் துறை செயலாளர்களின் கருத்துகள் அறிந்து முதல்வர் முடிவெடுப்பார்”.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *