சுஜித் மீட்பு பணி மழையால் தடைபடுமா ?. -பாலச்சந்திரன்
சென்னை.அக்டோபர்.28
நடுகாட்டுபட்டி வானிலை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கபட்டு மீட்பு குழுவினருக்கு தகவல்கள் தெரிவிக்கப்படுவதாக வானிலை ஆய்வுமைய தென் மண்டலத் தலைவர் பாலசந்திரன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் தெற்கு இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.இது குமரி கடலை நோக்கி நகர்ந்து வலுப்பெறும்,30,31 தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கன்னியாகுமரி,நெல்லை தூத்துக்குடி,ராமநாதபுரம் சிவகங்கை,விருதுநகர் மதுரை,புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், திருவள்ளூர்,காஞ்சிபுரம் திருவண்ணாமலை விழுப்புரம்,வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் வல்லம் மற்றும் குமரி மாவட்டம் வட்டார பகுதிகளில் 7செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
28,29,30,31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மன்னார் வளைகுடா,தென் தமிழகக் கடல் பகுதிகள்,குமரிகடல் பகுதி மாலத்தீவு,மற்றும் லட்ச தீவுப் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை நகரின் ஒரு சில இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.
மணப்பாறை நடு காட்டுப்பட்டியில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு வானிலை நிலவரங்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து தகவல்களை கொடுத்து வருகிறோம் மணப்பாறை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை மட்டுமே வாய்ப்பு உள்ளதாக பாலச்சந்திரன் கூறினார்.