ஸ்டாலினால் எப்போதுமே முதல்வராகவே முடியாது.. அதிரவைத்த மு.க.அழகிரி

தமிழகத்தில் ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரை, ஜன-3

திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் நேரடி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்த மு.க.அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்பினர். ஆனால் கட்சி தலைமை அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில், அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து முக அழகிரி தனது ஆதரவாளர்களுடன் இன்று மதுரை பாண்டிகோவில் உள்ள துவாரகா பேலசில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், பல்வேறு இடங்களில் திமுக வெற்றி பெற உழைத்தேன். இது தான் துரோகமா? என்று கூறினார். திருமங்கலம் தேர்தல் வெற்றியை இந்தியாவே உற்று நோக்கியது. திருமங்கலம் இடைத்தேர்தலில் ஒருவருக்கும் பணம் தரவில்லை. கருணாநிதியின் உழைப்புதான் திருமங்கலம் தொகுதி வெற்றிக்கு காரணம். திருமங்கலம் இடைத்தேர்தலில் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் திமுக ஆட்சி கைவிட்டு போயிருக்கும்.

திமுகவில் பதவி கிடைக்கும் என்று ஒரு நாளும் நான் எதிர்பார்த்ததில்லை. கட்சிக்காக மட்டுமே உழைத்தேன்.
கலைஞரின் மறைவுக்கு பிறகு திமுகவின் தலைவர் நீ தான் என்று ஸ்டாலினிடம் கூறியவன் நான். ஸ்டாலினுக்கு கருணாநிதியிடம் பொருளாளர் பதவியை கேட்டு பெற்றுத் தந்தவன் நான்.

திமுகவை வெற்றி பெறச் செய்ய உழைத்தது தான் துரோகமா என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். கட்சி அறிவிப்போ அல்லது வேறு எந்த அறிவிப்போ, தொண்டர்களாகிய நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நான் எனது முடிவை விரைவில் அறிவிப்பேன். தொண்டர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

ஸ்டாலின் முதல்வராக வரவே முடியாது. எனது தொண்டர்கள் விடவேமாட்டார்கள். அதற்கான நான் முதல்வராக வேண்டும் என்று விரும்பவில்லை. எத்தனையோ பேரை அமைச்சராக்கியுள்ளேன். ஆனால் ஒருவருக்கும் நன்றி இல்லை.

தொண்டர்களான உங்களுக்காக உழைக்க ஒருவன் உள்ளான் என்றால் அது மு.க.அழகிரி தான். கருணாநிதிக்கு இருக்கும் ஞானம் யாருக்கு இருக்கிறது. கருணாநிதியை மிஞ்சிவிட்டதாக ஸ்டாலின் நினைத்துக்கொண்டிருக்கிறார். கருணாநிதியை போன்று ஒருவர் பிறக்க முடியாது. கருணாநிதியை மறந்துவிட்டு அரசியல் நடத்துகிறார்கள். கருணாநிதியை மீண்டும் நாம் நினைவுபடுத்த வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *