மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் கல்வி, சுகாதாரத்தை அரசே ஏற்று நடத்தும்.. கமல் அறிவிப்பு
மக்கள் நீதி மய்யம் ஆட்சியில் கல்வி, சுகாதாரத்தை அரசு ஏற்று நடத்தும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சேலம், ஜன-3

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த மாதம் மதுரையில் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 3 கட்ட தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வந்த அவர் வரும் 6-ஆம் தேதி வரை சேலம் மற்றும் வேலூர் மாவட்டத்தில் நான்காம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தடைந்த கமல்ஹாசனுக்கு விமான நிலையத்தில் மநீம கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து சேலம் அழகாபுரம் பகுதியில் தனது நான்காம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய கமல்ஹாசன் திறந்தவெளி காரில் நின்று மக்களுடன் உரையாற்றினார்.
பின்னர் அங்கிருந்து அஸ்தம்பட்டி, கோரிமேடு வழியாக ஏற்காடு சென்ற அவர் ஏரிக்கரை ரவுண்டானா பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் தோட்ட தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
பிரசார நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம உரிமை, சம ஊதியம் என்பதே லட்சியம். மக்கள் நீதி மய்யம் ஆட்சியில் கல்வி, சுகாதாரத்தை அரசு ஏற்று நடத்தும். அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்திருந்தால், நான் அரசியலுக்கு வந்திருக்கமாட்டேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.